பயணிகள் கவனத்திற்கு.. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று முதல் மீண்டும் மின்சார ரெயில் சேவை குறைப்பு

164 ரெயில் சேவையில் இருந்து 115 ரெயில் சேவைகளாக குறைப்பது உள்பட சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பயணிகள் கவனத்திற்கு.. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று முதல் மீண்டும் மின்சார ரெயில் சேவை குறைப்பு
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கடந்த பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இம்மார்க்கத்தில் இதர மின்சார ரெயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள், எழும்பூர் ரெயில் நிலைய 5-வது நடைமேடை வழியாகவும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடை வழியாகவும் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு நடைமேடைகள் மாற்றப்பட்டதால், தண்டவாளங்களைப் கடப்பது மற்றும் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் தாமதமாகின்றன. முன்னதாக இயக்கப்பட்ட 204 ரெயில் சேவைகள், 164 ரெயில் சேவைகளாக குறைக்கப்பட்டது. மேலும், மின்சார ரெயில்கள் வேகம் குறைத்தும், தண்டவாள மாற்ற சிக்னலுக்காக நிறுத்தப்பட்டும் இயக்கப்படுகின்றன. ரெயில் சேவை குறைக்கப்பட்டாலும், 30 முதல் 45 நிமிடம் வரை ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டது.

இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ரெயில் சேவைகளை சீராக இயக்க ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 164 ரெயில் சேவையில் இருந்து 115 ரெயில் சேவைகளாக குறைப்பது உள்பட சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 10, 11-ல் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. வருகிற ஏப்ரல் 5-ந்தேதி வரையில் அமலில் இருக்கும். கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் 58 மின்சார ரெயில் சேவைகளும், மறு மார்க்கமாக செங்கல்பட்டு-கடற்கரை வழித்தடத்தில் 57 மின்சார ரெயில் சேவைகளும் என மொத்தம் 115 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள் ளது.

* சென்னை கடற்கரை-தாம்பரம்-சென்னை கடற்கரை வழித்தடத்தில் இரு மார்க்கமாகவும் பீக் அவர்ஸ் இல்லாமல் சாதாரண நேரத்தில் இயக்கப்பட்ட ஏ.சி. மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட மின்சார ரெயில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

* திருமால்பூர்-அரக்கோணம், சென்னை கடற்கரை-அரக்கோணம் விரைவு மின்சார ரெயில்கள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையேயான விரைவு மின்சார ரெயில்கள் (செமி பாஸ்ட்) (40402, 40404, 40405) பரங்கிமலையில் நின்று செல்லும்.

* சில மின்சார ரெயில்கள் சென்னை எழும்பூர்-பரங்கிமலை, எழும்பூர்-கூடுவாஞ்சேரி, எழும்பூர்-செங்கல்பட்டு என இரு மார்க்கமாகவும் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com