கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் ஒரு மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் ஒரு மணிநேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் ஒரு மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
Published on

கிண்டி,

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று பகல் 2.30 மணிக்கு மின்சார ரெயில் சென்றது. கிண்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் பரங்கிமலை நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்றபோது தண்டவாளத்தில் ஒருவித சத்தம் கேட்பதை உணர்ந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

இதுபற்றி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் காடுத்தார். உடனே ரெயில் நிலைய அதிகாரி சென்று பார்த்த போது, கிண்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தண்டவாளத்தின் ஒரு பகுதி வழக்கத்தைவிட சற்று வளைந்து இருப்பதை கண்டனர்.

1 மணிநேரத்துக்கு பிறகு

இதையடுத்து கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மற்ற மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து வளைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் மாற்றி அனுப்பி வைத்தனர். சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு தண்டவாளத்தை சீரமைத்தனர். பின்னர் அந்த பகுதியில் ஜல்லி கற்களை அதிகமாக கொட்டினார்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மாலை 3.30 மணியளவில் கிண்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மின்சார ரெயில்களும் அங்கிருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்டு சென்றன.

பயணிகள் அவதி

கிண்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு மின்சார ரெயில்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக கடற்கரை-தாம்பரம் இடையே சுமார் ஒரு மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

அதே நேரம் தாம்பரம்-கடற்கரை இடையே எந்த பாதிப்பும் இல்லாமல் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. தண்டவாளம் வளைந்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com