ரெயில்வே வாரிய ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்: பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி

சென்னையில் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு மின்சார ரெயில்களை இயக்க முடிவு செய்திருப்பதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி அளித்துள்ளார்.
ரெயில்வே வாரிய ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்: பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் சரக்கு போக்குவரத்து மற்றும் அதன் சாதனைகள் குறித்து நேற்று காணொலி காட்சி மூலமாக நிருபர்களிடம் பேசியதாவது:-

கடந்த ஏப்ரல்-ஆகஸ்டு மாதங்களில், உணவு பொருட்கள், உரம், சிமெண்டு உள்ளிட்ட பொருட்கள் கடந்த ஆண்டைவிட அதிகளவில் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதன்படி சேலத்தில் 29,809 வேகன்களிலும், பாலக்காட்டில் 15,904 வேகன்களிலும், மதுரையில் 14,452 வேகன்களிலும், திருவனந்தபுரத்தில் 14,154 வேகன்களிலும், சென்னையில் 11,434 வேகன்களிலும், திருச்சியில் 10,234 வேகன்களிலும் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் தெற்கு ரெயில்வே ஆயிரத்து 43 சரக்கு பார்சல் ரெயில்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் 33 ஆயிரத்து 135 டன் அளவிலான பார்சல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை ரூ.13.98 கோடி வருமானத்தை தெற்கு ரெயில்வே ஈட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 507 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 7.35 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

ஜூன் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரையிலான ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.70.58 கோடி பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. மேச்சேரி சாலை-மேட்டூர் இடையே 12 கி.மீ இரட்டை வழி பாதைகள் மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு 3 வழி பாதைகள் பணி முடிவடைந்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் கூடுதலான மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல் கடம்பூர்-தட்டப்பாறை, வாஞ்சிமணியாச்சி-கங்கை கொண்டான், மங்களூரு-படில் இடையே இரட்டை வழிப்பாதைகளும், கடலூர் போர்ட்-மயிலாடுதுறை, தஞ்சாவூர்-திருவாரூர், திருவாரூர்-காரைக்கால், மயிலாடுதுறை-திருவாரூர் இடையே மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்துள்ளது.

கொரோனாவுக்காக பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் 80 படுக்கைகள் கொண்ட வார்டு செயல்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை 901 கொரோனா நோயாளிகள் பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மின்சார ரெயில்களை இயக்குவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த நிலையில் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மதுரை, கோவை வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி 2023-ம் ஆண்டு முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com