

பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முரு கன் கோவில் உலக புகழ்பெற்றது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் நேற்று வாரவிடுமுறை மற்றும் பங்குனி மாத பிறப்பு என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மலைக்கோவிலுக்கு விரைவாக சென்றுவர மின்இழுவை ரெயில் வசதி உள்ளது. இங்கு 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வழக்க மாக காலை 6 மணிக்கு அவற்றின் சேவை தொடங்கும். அதன்படி, நேற்று காலையில் ரெயிலை இயக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ரெயில் நிலைய மேல்தளத்தில் மின்வயரில் தீப்பிடித்து எரிந்ததுடன், எந்திரம் பழுதானது. உடனடியாக பணியாளர்கள் மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின்வயரை மாற்றியதோடு, எந் திர பழுதை சரிசெய்யும் பணியை தொடங்கினர். ஆனால் மாலை வரை பழுது நீக்கும் பணி நடந்ததால் மின்இழுவை ரெயில் சேவை நேற்று ஒரு நாள் முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதன்காரணமாக ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அங்கு நீண்ட வரிசையில் ரோப் காரில் ஏறுவதற்கு பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். ஒருபுறம் அலைமோதிய கூட்டம், மறுபுறம் மின்இழுவை ரெயில் சேவை பாதிப்பு உள்ளிட்ட காரணத்தால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.