முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி கொட்டும் மழையில் மின்வாரிய என்ஜினீயர்கள் ஊர்வலம்

முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி சென்னையில் கொட்டும் மழையில் மின்சார வாரிய என்ஜினீயர்கள் யூனியன் சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது.
முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி கொட்டும் மழையில் மின்வாரிய என்ஜினீயர்கள் ஊர்வலம்
Published on

தமிழக அரசு, மின்சார வாரியம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர்ஸ் யூனியன் சார்பில் சென்னை அண்ணா சாலை அருகில் உள்ள லாங்ஸ் கார்டன் சாலையில் இருந்து கொட்டும் மழையில் ஊர்வலம் தொடங்கியது. யூனியன் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆர்.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் ஆர்.கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி பிறப்பித்த அரசாணை எண்-100-ஐ அடிப்படையாக கொண்டு வாரியத்தில் மறுசீரமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் 2010-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன. மறுசீரமைக்கப்பட்ட நிறுவனத்தில் முழு ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அப்போது பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் முத்தரப்பு ஒப்பந்தம் கட்டாயமாக்கப்பட்டது. இது வாரியத்தில் பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்த முத்தரப்பு ஒப்பந்தம் வெறும் காகித ஒப்பந்தமே. முறையாக நிறைவேற்றாமல் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்து வருகிறது.

முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தவும், மின்சார வாரிய நிர்வாகம் மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கவும் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.

இதில் சென்னை மற்றும் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து மண்டலங்களில் இருந்தும் 700 என்ஜினீயர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com