

சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை அய்யப்பன். அந்த மாணவி வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு தனியாக இருந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். மேலும் அந்த மாணவியிடம் அத்துமீறியும் நடக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் அந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்த அய்யப்பன் சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். மாணவி தொடர்ந்து சத்தம் எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் தான் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து கழுத்தில் பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.