மின்வாரிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேற்பார்வை பொறியாளர் உத்தரவு

திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மின்வாரிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
Published on

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் மற்றும் பிற அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பேசும்போது, "வானிலை அறிக்கைபடி இன்னும் சில தினங்களுக்கு திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும், அனைத்து மின்னிணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வாரிய விதிமுறைகளுக்கு முரணான உள்ள மின் இணைப்புகளை முறைப்படுத்தவும், விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொது மக்களிடையே மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்" உத்தரவிட்டார்.

மேலும் பொது மக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும் (TNPDCL OFFICIAL APP) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைத்தளங்கள், திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com