அரக்கோணம் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
 கைது
Published on: 

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பெயர் மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சின்ன கைனூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 34). இவரது தாயார் பெயரில் இருந்த மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று அரக்கோணத்தை அடுத்த கும்பினிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்தார்.

அதைத்தொடர்ந்து மின் இணைப்பு மாற்றம் பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு போர்மேனாக பணியாற்றி வந்த சேகர் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பெருமாள், இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெருமாளிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை வழங்கி, அதனை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து பெருமாள் நேற்று காலை கும்பினிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அந்த பணத்தை சேகரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் கையும் களவுமாக சேகரை பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X