ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்

பிரகாஷ் அழகு சாதன பொருள்கள் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், நத்தக் காட்டுப்பிரிவு பகுதியில் அழகு சாதன பொருள்கள் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் மின் பயன்பாட்டை வணிக பயன்பாட்டில் இருந்து சிறு, குறு தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற முடிவு செய்தார்.

இதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்துவை (33) சந்தித்தார். அவர் மின் இணைப்பை மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், இசக்கிமுத்துவிடம் முன்பணமாக ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, இது தொடர்பாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை இசக்கிமுத்துவிடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இசக்கிமுத்துவை கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இசக்கிமுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து மேற்பார்வை பொறியாளர் சுமதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com