மின்சார வாரியத்தின் பணியிடங்கள்: தேர்வர்களுக்கு சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும் - வேல்முருகன்

கடந்த 08.01.2020 அன்று 364 உதவி மின் பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது.
வேல்முருகன்
Published on

சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் பணியிடங்கள்: 6 ஆண்டுகால நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் (AE-Electrical) பணியிடங்களுக்கான ஆள்தேர்வில், கடந்த 6 ஆண்டுகால நிர்வாகத் தாமதத்தால் தங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் இழந்து தவிக்கும் தகுதியுள்ள தேர்வர்களுக்கு, அரசு உடனடியாக "சிறப்பு ஒருமுறை வயதுத் தளர்வு (Special One-time Age relaxation)” வழங்கி அவர்களின் பணிநியமனத்தை உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) கடந்த 08.01.2020 அன்று 364 உதவி மின் பொறியாளர் (Electrical) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. நான்கு வாரங்களுக்குள் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, 15.02.2020 அன்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. முந்தைய அறிவிப்பில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வுக்காக தேர்வர்கள் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருந்தனர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் ரூபாய் 1000 தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், 07.05.2021 அன்று தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றது. அதன்பின், 31.01.2022 அன்று, அப்போதைய அரசின் புதிய கொள்கை முடிவின் படி (TNPSC Act 14 of 2022) மின்வாரிய ஆள்தேர்வுப் பணிகளை இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொள்ளும் என்றும், ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 04.07.2022 அன்று மின்வாரியத்தின் பழைய அறிவிப்பாணை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் சென்னையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று முறையிட்டபோது, "விண்ணப்பித்த தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை, TNPSC மூலம் கூடிய விரைவில் இத்தேர்வு நடத்தப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை நம்பி தேர்வர்கள் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருந்தனர்.

TNPSC

ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இத்தேர்வு குறித்து TNPSC எந்த மறு அறிவிப்பும் வெளியிடாததால் தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், 26.07.2024 அன்று பொதுப்பணித்துறையில் (PWD) உள்ள 67 உதவி மின் பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டது. அதன்தொடர்ச்சியாக எழுத்துத்தேர்வுகளும் நடத்திமுடிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றொரு கூடுதல் கூடுதல் அறிவிப்பு (Addendum) என்ற பெயரில், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 364 காலிப்பணியிடங்களில் 211 இடங்கள், 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த பொதுபணித்துறை தேர்வு முடிவுகளிலிருந்து நிரப்பப்படும் என்றும், மேலும் எதிர்பார்ப்பிற்கு மாறாக இப்பணிக்கு 2020-ல் நிர்ணயிக்கப்பட்ட பழைய வயது வரம்பே நிர்ணயிக்கப்பட்டது.

6 ஆண்டுகள் காத்திருப்பு

TNPSC ன் இந்த செயல் 6 ஆண்டுகளாக இப்பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்த தேர்வர்களின் தலையில் இறக்கப்பட்ட பேரிடியாகும். இந்த செயலானது ஏற்கனவே இப்பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்த தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற குறைந்தபட்ச நடைமுறை புரிதலின்றி TNPSC ன் இவ்வறிவிப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும். இவ்வாறான கூடுதல் அறிவிப்பு (Addendum) என்ற பெயரில் ஏற்கனவே பல நிர்வாக காரணங்களால் ரத்துசெய்யப்பட்ட ஒரு துறையின் காலிப்பணியிடங்களை மற்றோரு துறைக்கு நடைபெற்று முடிந்த எழுத்துத்தேர்வு முடிவுகளில் இருந்து நிரப்பப்படுமென்று வெளியிடப்படும் அறிவிப்பானது அடிப்படை தேர்வு விதிமுறைகளுக்கு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு புறம்பானதாகும்.

இதேபோன்ற மற்றுமொரு விதிமீறலை 2025 ஆண்டு அறிவிப்பினிலும் TNPSC செய்தது. இதன்பொருட்டு பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகளிடமும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உயர் அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டாலும் இரு நிர்வாகமும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதுடன் நிரந்தர தீர்வு காண முன்வரவில்லை. ஆகையால் தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com