

சென்னை,
சர்வர் மேம்படுத்தும் பணியின் காரணமாக, மின்வாரிய உயரழுத்த மின்நுகர்வோருக்கான மீட்டர் ரீடிங், மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட இணையதள சேவைகள் நாளை (28.05.2026) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்காது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தற்போது பயன்பாட்டில் உள்ள உயரழுத்த பில்லிங் தரவுத்தளம் (HT Billing Database) மற்றும் சர்வர் அமைப்பு, உயரழுத்த மின்நுகர்வோரின் பில் விவரங்கள், மீட்டர் ரீடிங் தகவல்கள், ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் மொபைல் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முக்கியமான வருவாய் சார்ந்த கணினி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TNPDCL) சார்பில், உயரழுத்த (HT) மின்நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சேவையை மேலும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும் மாற்றும் நோக்கில், பழைய சர்வரிலிருந்து புதிய மேம்பட்ட சர்வருக்கு தரவுத்தள மாற்று (Migration) பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. புதிய அமைப்பில் ஆரக்கிள் 19சி போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தகைய மாற்றுப் பணிகள் 28.05.2026 அரசுவிடுமுறை நாளான வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, உயரழுத்த பில்லிங் நுகர்வோர் போர்டல் (HT Billing Consumer Portal) தற்காலிகமாக செயல்படாது. இதனால் உயரழுத்த மின்நுகர்வோரும், கள அலுவலர்களும் இணையதள சேவைகளை அணுக முடியாது.
பொதுமக்கள் மற்றும் உயரழுத்த மின்நுகர்வோர் இதனை கருத்தில் கொண்டு, தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த சேவை மேம்பாட்டு நடவடிக்கை, உயரழுத்த மின்நுகர்வோர்களுக்கு எதிர்காலத்தில் வேகமான மற்றும் தடையற்ற சேவைகளை வழங்க உதவும் என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. நுகர்வோர்களுக்கு ஏற்படும் தற்காலிக சிரமத்திற்காக தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.