

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குத் தடையில்லா சான்றின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டும், அதி காரிகளின் தடையில்லா சான்று இன்றி வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க மின்வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இருப்பினும், நீர்நிலை, மேய்க்கால், மந்தைவெளி, வனத்துறை நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.
இணைப்புகள் ‘குறைந்த அழுத்த மின் கட்டணம் ஐஏ (3) -புறம்போக்கு' பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, சாதாரண வீட்டு உபயோக கட்டணமே வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'படிவம் 1'-ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'படிவம் 6' (பின்னிணைப்பு III)-ல் இழப்பீட்டு பத்திரம் வழங்குவதோடு, வழக்கமான பாதுகாப்பு வைப்புத் தொகையை விட இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டும்.
மின் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து கட்டணங்களும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி விண்ணப்பதாரரிடம் இருந்து வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் நீதித்துறை சாராத முத்திரைத்தாளில் ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதில், அரசுக்கு நிலம் தேவைப்படும்போதோ அல்லது எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதோ, எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்றும் தெரிந்தே விண்ணப்பிப்பதாக கூற வேண்டும்.
இந்த மின் இணைப்பு பெறுவதன் மூலம், நிலத்தின் மீது எந்தவிதமான நிரந்தர உரிமையோ அல்லது முழு உரிமையோ கோர முடியாது. தாங்கள் குடியிருக்கும் வீடு தடை செய்யப்பட்ட நீர் நிலை, மேய்க்கால், மந்தைவெளி உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என்றும் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வீடு தடை செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களில் இல்லை என் பதை ‘தமிழ் நிலம்' இணையதளத்தின் மூலம் பிரிவு அதிகாரி உறுதிசெய்ய வேண்டும்.
இந்த அரசாணை வெளியிடப்பட்டதும், தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளின் விதிமுறை 27 (12)-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும், இந்த மின் இணைப்புகளுக்கு தனி கட்டணப் பிரிவை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், தாலுகா மற்றும் மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வாரியத் தலைவர் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.