

சென்னை,
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தும் என்பதால், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்விசிறிகள் மற்றும் ஏசிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். மின்விசிறிகள் 24 மணி நேரமும் நிற்காமல் இயங்கும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் மின் நுகர்வும் அதிகரிக்கும்.
ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்திலேயே மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. அதாவது, தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம் 43.47 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் பதிவான அதிகபட்ச அளவாகும்.
மாநிலம் முழுவதும் ஒரு நாள் பயன்படுத்தப்படும் மின்சார அளவு ‘மின் நுகர்வு’ எனப்படுகிறது. இது தமிழகத்தில் தினசரி சராசரியாக 30 கோடி யூனிட்களாக உள்ளது. கோடைக்கால தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின் நுகர்வும் உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக தினசரி சராசரியாக 40 கோடி யூனிட்களாக இருந்த மின் பயன்பாடு, கடந்த 3-ஆம் தேதி 43.47 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதுவே நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச அளவாகும். கடந்த 2024 ஏப்ரல் 30-ஆம் தேதி 45.43 கோடி யூனிட்கள் பதிவானதே இதுவரையிலான உச்ச அளவாக இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் வெயில் தீவிரம் மேலும் அதிகரித்தால், மின் நுகர்வு இன்னும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏப்ரல் இறுதி வாரங்களில் மின் நுகர்வில் வரலாற்றிலேயே புதிய உச்சம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.