

சென்னை,
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரியாக பதிவாகி இருந்ததாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான மிக அதிக வெப்பநிலையாகும். எல்நினோ தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வெப்பநிலை அதிகரித்ததன் எதிரொலியாக மின் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்ச மின் தேவை 21,615 மெகாவாட்டாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.14 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உச்ச மின் தேவை 19,275 மெகாவாட் இருந்தது.
அதேபோல், ஆற்றல் நுகர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11,271 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், அது இந்த ஆண்டு 12.66 சதவீதம் உயர்ந்து 12,699 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 2 நாட்கள் மட்டுமே 400 மில்லியன் யூனிட்டைக் கடந்த மின் நுகர்வு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 நாட்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.