மின்சாரம் விலை.. ஆந்திராவில் குறைவு, தமிழகத்தில் அதிகம்; வித்தியாசம் ஏன்?

ஆந்திர பிரதேச மின் ஒருங்கிணைப்புக்குழு ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 என்ற விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மின்சாரம் விலை.. ஆந்திராவில் குறைவு, தமிழகத்தில் அதிகம்; வித்தியாசம் ஏன்?
Published on: 

புதுடெல்லி

தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே மின்சாரம் வாங்குவதற்கான விலையில் பெரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, வழக்கமான மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் போதிய அளவில் இல்லாவிட்டால், மாநில மின்வாரியங்கள் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கின்றன.

தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டை தடுக்க, யூனிட் ஒன்றுக்கு ரூ.35 என்ற அதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரம் கொள்முதல் செய்கிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சார தேவை 16,800 மெகா வாட்டாக இருந்தது. இந்த ஆண்டு அது 21,700 மெகா வாட்டாக (சுமார் 30 சதவீதம்) அதிகரித்துள்ளது.

மத்திய மின் தொகுப்பு

எல்-நினோ காரணமாக இன்னும் வெப்பத்தின் தாக்கம் குறையாததால், தேசிய அளவிலும் மாநில அளவிலும் மின்சார தேவை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்திடம் இருந்து மத்திய மின் தொகுப்பு வழியாக கிடைக்க வேண்டிய 1,850 மெகா வாட் மின்சாரம் கடந்த மாதம் முதல் கிடைக்கவில்லை. ஒப்பந்தம் செய்யப்பட்ட 3,500 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தில் 500 மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது. அனல் மின்சாரமும் கிடைக்கவில்லை.

எரிவாயு மின்சாரம்

மத்திய தொகுப்பில் மின் பற்றாக்குறை ஏற்படும்போது மாற்று ஏற்பாடாக கியாஸ் பவர் என்ற எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.35-க்கும், நாப்தா மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.47-க்கும் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். நாப்தா விலை அதிகம் என்பதால், தற்போது கிடைக்கும் எரிவாயு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறோம் என்றார்.

ஆந்திர பிரதேசம்

இந்நிலையில், மின்சாரம் வாங்குவதற்கான விலையில் தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே பெரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் 'டீப்' இணையதள ஏலத்தில், அக்டோபர் மாதத்தேவைக்காக ஆந்திர பிரதேச மின் ஒருங்கிணைப்புக்குழு 150 மெகா வாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் அக்டோபர் மாதத்தேவைக்கான ஏலத்தை செப்டம்பர் 9-ந்தேதியே இறுதி செய்து விட்டது. தமிழகமோ அக்டோபர் 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான தேவைக்கான ஏலத்தை அதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கோரியது என்று அதிகாரிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com