

சென்னை,
தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்யும் மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தமிழ்நாட்டில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய ஒப்பந்தங்களில் ஒரு யூனிட் ரூ.35 முதல் ரூ.37.50 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது தேவை மேலும் அதிகரித்துள்ளதால் விலை ரூ.41.50 ஆக உயர்ந்துள்ளது.
தட்டுப்பாடற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும், மின்வெட்டைத் தவிர்க்கவும் இந்த அவசரகால குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டைச் சமாளிக்க, ஏற்கனவே இதற்கு முன்னர் தமிழக அரசு வெளிச்சந்தையில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை (சராசரியாக ரூ.35) தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய எடுத்த முடிவிற்கு தமிழக அரசியலில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின
முந்தைய குறைந்த விலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்தியாவின் மிக அதிக விலையான ரூ.35-க்கு மின்சாரம் வாங்கும் தவெக கூட்டணி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன, இந்த சூழலில் இந்த புதிய அறிவிப்பு அரசியலில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் அதிக விலைக்கு நாங்கள் மின்சாரம் கொள்முதல் செய்யப் போவதில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
37 முதல் 41 ரூபாய் வரையிலான குறிப்பிடப்பட்ட விலையில் நாங்கள் மின்சாரம் கொள்முதல் செய்யப் போவதில்லை.
நாங்கள் இன்று டெண்டரை திறந்துள்ளோம், மேலும் பல விற்பனையாளர்கள் மிக அதிக விலைகளை குறிப்பிட்டுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான மின்சாரம் எங்களிடம் போதுமான அளவு இருப்பதாலும், அடுத்த கோடை காலத்திற்காக மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்படுவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை. இதற்கிடையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாங்கள் வெளியிடுவோம்.
எனவே, இனி அதிக விலைக்கு எரிவாயு கொள்முதல் செய்யப்படாது, மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யுமாறு நான் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.