

சென்னை,
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது.
இந்தநிலையில் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று இரவு அறிவித்தது. இந்த புதிய மின் கட்டண உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* 400 யூனிட் வரை உள்ள வீட்டு பயன்பாடு மின்கட்டணம், இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ,4.60 ஆக இருந்தது. தற்போது 20 பைசா உயர்ந்து, ரூ,4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 401 முதல் 500 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ,6.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 30 பைசா உயர்ந்து, ரூ,6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ,8.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 40 பைசா உயர்ந்து, ரூ,8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 601 முதல் 800 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ,9.20 ஆக இருந்தது. தற்போது 45 பைசா உயர்ந்து, ரூ,9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 801 முதல் 1,000 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ,10.20 ஆக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து, ரூ,10.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* 1,000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இதுவரை யூனிட்டுக்கு ரூ,11.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 55 பைசா உயர்ந்து, ரூ,11.80 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
* அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ,8.15-ல் இருந்து ரூ,8.55 ஆக உயர்ந்துள்ளது.
* கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ,9.35-ல் இருந்து ரூ,9.80 ஆக உயர்ந்திருக்கிறது.
* ரெயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ,8.15-ல் இருந்து ரூ,8.55 ஆக உயர்ந்திருக்கிறது.
* குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ,6.95 ஆக உயர்ந்திருக்கிறது.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ,8.15-ல் இருந்து ரூ,8.55 ஆக உயர்ந்திருக்கிறது.
* தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கான 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ,8.70-ல் இருந்து ரூ,9.10 ஆக உயர்ந்திருக்கிறது.
* விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ,7.65-ல் இருந்து ரூ,8 ஆக உயர்ந்திருக்கிறது.
* தொழில், ஐ டி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ,7.65-ல் இருந்து ரூ,8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ,4.60-ல் இருந்து ரூ,4.80 ஆக உயர்ந்திருக்கிறது.
* கட்டுமான பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ,12.25-ல் இருந்து ரூ,12.85 ஆக உயர்ந்திருக்கிறது. மேற்கண்டவாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வீடுகளுக்கான 100 யூனிட்டுகள் வரையும், குடிசைகளுக்கான இலவச மின்சாரம் வழங்குவதும் தொடரும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.