சென்னை மாநகர பஸ்களில் மின்னனு பயணச்சீட்டு எந்திரங்கள் செயல்பாடு சீரானது
சென்னை,
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக பஸ்களில் உள்ள மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களில் (இ.டி.எம்.) நேற்று திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிஜிட்டல் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டதால் கண்டக்டர்கள் சாதாரண வகையில் வழங்கப்படும் கைமுறை டிக்கெட்டுகளை வழங்கினர். யு.பி.ஐ., டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமான பரிவர்த்தனைகள் மற்றும் 'சென்னை ஒன்' செயலி தற்காலிகமாகச் செயல்படவில்லை.
சர்வர் கோளாறு காரணமாக மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் பயணிகள் ரொக்க பணம் இல்லாததால் இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். அதேநேரம் பல இடங்களில் பயணிகள் ரொக்கப் பணத்தைக் கையில் எடுத்துச்செல்லுமாறு போக்குவரத்து கழக பணியாளர்கள் பயணிகளை அறிவுறுத்தினர்.
தொழில்நுட்பக் குழுவினர் இந்தச் சிக்கலை விரைந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு நேற்று இரவு சரி செய்யப்பட்டது. இதையடுத்து மின்னணு டிக்கெட்கள் வழக்கம்போல் பயணிகளுக்கு வழங்கப்பட்டன என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

