கடையம் அருகே மின்னணு கழிவுகளுக்கு தீ வைப்பு: நச்சுப் புகையால் பொதுமக்கள் அவதி

கழிவுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ மளமளவெனப் பரவி விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்தது.
கடையம் அருகே மின்னணு கழிவுகளுக்கு தீ வைப்பு: நச்சுப் புகையால் பொதுமக்கள் அவதி
தீ விபத்து
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாசன கால்வாய் ஓரத்தில் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த எலக்ட்ரானிக்ஸ் (மின்னணு) கழிவுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

விடிய விடிய எரிந்த தீ

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பாசன கால்வாய்களின் கரைகளில், மர்ம நபர்கள் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மின்னணு கழிவுகளை கொட்டிச் செல்வதாக புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தெற்கு பத்து பகுதி பாசன கால்வாய் அருகே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளுக்கு நேற்றிரவு (புதன்கிழமை) மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். கழிவுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ மளமளவெனப் பரவி விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்தது.

தீயணைப்பு பணியில் சிக்கல்

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கழிவுகள் கொட்டப்பட்டிருந்த பாசன கால்வாய் பகுதிக்குள் தீயணைப்பு வாகனம் உள்ளே செல்வதற்கு சரியான பாதை இல்லாததால், தீயை அணைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள்-விவசாயிகள் அச்சம்

விடிய விடிய எரிந்த மின்னணு கழிவுகளால் அப்பகுதி முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்து, காற்றில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் கண் எரிச்சல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், எரிந்த கழிவுகளின் நச்சுத் துகள்கள் பாசன கால்வாய் நீரில் கலந்து விவசாய நிலங்களைப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கழிவுகளைக் கொட்டித் தீ வைத்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X