கம்பைநல்லூர் அருகே சோகம்ஏரிக்கரையை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

Published on

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஏரிக்கரையை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியானது.

மனதை பிசையும் இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மீண்டும் வெளியேறிய யானை

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது யானைகள் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன.

பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த மாதம் வந்த ஆண் யானை மற்றும் மக்னா யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தின. இதையடுத்து வனத்துறையினர் கடந்த மாதம் கும்கி யானையின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை பிடித்தனர். அந்த மக்னா யானை முதுமலை வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் மக்னா யானையை தேடி தர்மபுரி அருகே வந்து சுற்றித்திரிந்த ஆண் யானையை வனத்துறையினர் திருமல்வாடி காட்டுக்குள் விரட்டினார்கள். ஆனால் இந்த யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.

மின்சாரம் தாக்கி பலி

இந்த ஆண் யானை நேற்று அதிகாலை கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கெலவள்ளி ஏரியில் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் யானை திப்பம்பட்டி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடந்து சென்றது. அந்த யானையை பின்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் சென்றனர். அப்போது யானையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

இந்த நிலையில் திப்பம்பட்டியில் இருந்து வகுரப்பம்பட்டி வழியாக ஆண் யானை கம்பைநல்லூர் அருகே உள்ள ஏரிக்கரைக்கு சென்றது. அந்த ஏரிக்கரையின் மேற்பகுதியை கடந்து செல்ல யானை முயன்றது. அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது யானை லேசாக உரசியது. இதில் யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பிளிறியபடி சுருண்டு விழுந்த ஆண் யானை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானது.

அதிர்ச்சியில் உறைந்தனர்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சோக சம்பவத்தால் அந்த யானையை பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வன பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயினி, காரிமங்கலம் தாசில்தார் சுகுமார், கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் தர்மபுரி மண்டல வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் யானையை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து யானையின் உடல் அங்கேயே குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் யானைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் சங்கு ஊதி இறுதி சடங்கையும் கிராம மக்கள் நடத்தினர்.

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி யானை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com