அரசு ஊழியரை மிதித்து கொன்ற இடத்திலேயே சுற்றித்திரியும் யானை - வனத்துறையினர் விளக்கம்

விவசாயிகள் இரவு-பகலாக கண்காணித்து வனத்துறை உதவியுடன் யானையை விரட்டினர்.
அரசு ஊழியரை மிதித்து கொன்ற இடத்திலேயே சுற்றித்திரியும் யானை - வனத்துறையினர் விளக்கம்
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த 9-ந் தேதி ஒரு தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை, அந்த தோட்டத்தின் உரிமையாளரான சுப்பையா (வயது 72) என்ற ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியரை காலால் மிதித்து கொன்றது. இந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதி விவசாயிகள் இரவு-பகலாக கண்காணித்து வனத்துறை உதவியுடன் யானையை விரட்டினர்.

தற்போது அந்த யானை புளியரை பகுதிகளில் மீண்டும் உலா வருகிறது. வனப்பகுதிக்கு செல்லாமலும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வராமலும் சுப்பையா கொல்லப்பட்ட தோட்டத்தின் அருகிலேயே சுற்றி, சுற்றி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை மயக்க ஊசி செலுத்தி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

யானைகளுக்கு அதிகமான ஞாபக சக்தி உண்டு. அநியாயமாக ஒருவரை மிதித்து கொலை செய்துவிட்டோமே? என்ற வருத்தம் யானைகளுக்கு உண்டு. பாகனை கொன்ற யானைகள் கூட சில நாட்கள் உணவு சாப் பிடாமல் கவலையில் இருக்கும். எனவே, இந்த யானையும் சுப்பையா உயிரிழந்த பகுதிக்கு மீண்டும்,மீண்டும் வருகிறது.

இந்த யானைக்கு மதம் பிடித்து உள்ளதா? என்பது குறித்து அறிவதற்காக அதனுடைய சாணத்தை எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கவனமுடன் விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டும். இன்னும் சில நாட்களில் இந்த யானை வழக்கம்போல் வனத்துக்குள் சென்றுவிடும். யானையின் நட மாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X