

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் ஒரு குழுவாகவும், 4 காட்டு யானைகள் மற்றொரு குழுவாகவும், பெண் காட்டு யானை ஒன்று தனியாகவும் சுற்றித்திரிந்து வருகின்றது.
இதில் தனியாக சுற்றித்திரியும் பெண் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அந்த பெண் காட்டு யானை நேற்று காலை தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வனப்பகுதியையொட்டி உள்ள தனபால் கொட்டாய் என்ற குடியிருப்பு பகுதியில் கடும் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்தது.
அப்போது அந்த யானை விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நேரத்துக்கு பின் அந்த யானை அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது.