

ஒகேனக்கல்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர் ஒகேனக்கல், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள வயல்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக யானைகள் கூட்டம், கூட்டமாக வெளியேறி சுற்றித்திரிகின்றன. அப்போது யானைகள் சாலையோரம் உள்ள மரங்களின் நிழல்களில் நின்று இளைப்பாறியது. பின்னர் அந்த யானைகள் தர்மபுரி-ஒகேனக்கல் சாலையை கடந்து சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தினர். ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து வந்தனர். யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.