

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 3-வது நீதிபதியாக, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சத்தியநாராயணனை, சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.
இதன்படி, நேற்று முன்தினம் முதல் இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். முதல் நாள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இரண்டாவது நாளான நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் மோகன் பராசரன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-
18 பேரை தகுதி நீக்கம் செய்தபோது, அ.தி.மு.க. என்ற கட்சியே இரண்டாக பிரிந்து, முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அ.தி.மு.க., இரு அணிகளாக இருந்தது.
தகுதி நீக்க நடவடிக்கையின்போது, சபாநாயகருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில், அ.தி.மு.க., (அம்மா அணி) என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அ.தி.மு.க. என்ற கட்சியே இல்லாதபோது, அ.தி.மு.க.வின் கொறடா, 18 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி எப்படி பரிந்துரை செய்ய முடியும்?
அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு தொடர்பாக தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவு எடுக்க முடியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என கட்சி இரண்டாக பிரிந்தது.
அதன்பிறகு சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறைக்கு சென்றபிறகு இந்த அணிகள் எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று மூன்று அணிகளாகி உடைந்து விட்டது.
கடைசியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக சேர்ந்துவிட்டோம் எனக்கூறியதால் கட்சியும், சின்னமும் அவர்களுக்கு சென்றது.
எனவே, கட்சி முடக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில், தேர்தல் ஆணையத்தை மீறி 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. இதேபோல, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின்போது, அதற்கு எதிராக ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியபோது, தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் தன்னால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று சபாநாயகர் கூறினார்.
அதே சபாநாயகர் தான், அதே காலக்கட்டத்தில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, சபாநாயகரின் உத்தரவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். இந்த வழக்கு தொடர்ந்து இன்றும் (புதன்கிழமையும்) விசாரிக்கப்பட உள்ளது.