பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் வருகிற 31-ந் தேதி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
Published on

குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி "நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 2023-2024-ம் நிதியாண்டில் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி வருகிற 31-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் கல்லூரி, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரி வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் விவரம் வருமாறு:-

பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி என்ற தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறும்.

பள்ளி, கல்லூரி போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com