அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனம் பூசப்பட்டது

திருஉத்தரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் திருமேனி மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி மீண்டும் சந்தனம் பூசப்பட்டது.
அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனம் பூசப்பட்டது
Published on

ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் திருமேனி மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி மீண்டும் சந்தனம் பூசப்பட்டது.

சந்தனம் களையும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி காலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேக தீபாராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் நடைசாத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

புதிய சந்தனம்

அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மேலும் மரகத நடராஜர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

ஏராளமான பக்தர்கள் தரிசனம்

இரவு 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதாலும், விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com