

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் சிறந்து விளங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்த பலர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்கள் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ரெயில் நிலையம் போதிய வசதிகள் இன்றி இருக்கிறது. ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மாணிக்கம் தாகூர் எம்.பி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களாக ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடை மேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழை விட இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ரெயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில் " சிவகாசி ரெயில் நிலைய பெயர் பலகையில் தமிழை பின்னுக்கு தள்ளி இந்திக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களின் மொழி , உணர்வுகளை மதிக்காமல் தென்னக ரெயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தி திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும். தமிழே முன்னவல் ! மூத்தவள்! முதன்மையானவள்! என பதிவிட்டுள்ளார்.