ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடரும் போராட்டம் மேலும் 6 கிராமங்கள் ஆதரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடரும் போராட்டம் மேலும் 6 கிராமங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. #Sterliteprotest
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடரும் போராட்டம் மேலும் 6 கிராமங்கள் ஆதரவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போராட்டம் இன்று 53-வது நாளாக நீடிக்கிறது.

பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பண்டாரம் பட்டி கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கினர். அங்குள்ள மைதானத்தில் அமர்ந்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராம மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இதனிடையே அப்பகுதியில் உள்ள மடத்தூர் கிராம மக்களும் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.

இதனால் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தும் கிராமங்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அக்கம்பக்கத்து கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அ.குமரெட்டியாபுரம் வந்தார். அங்கு பொதுமக்களை சந்தித்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும் போது

ஆலைக்கு எதிராக நாம் போராடும் போது, ஆலை அமைவதற்கு துணையாக இருந்தவர்களும் நம்முடன் சேர்ந்து போராடுவது மிகப்பெரிய கொடுமை. அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை உணர்வு வர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். நமது பிரச்சினையை அரசு கையில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசை நாம் கையில் எடுக்க வேண்டும். அதிகாரம் எப்போதும் மக்களுக்கானது. இந்த போராட்டத்தில் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம். நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

ஸ்டெர்லைட் மட்டும் இல்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பது, 8 வழிச்சாலை அமைப்பது போன்ற எல்லா கொடுமைகளில் இருந்தும் நம் மக்களை காப்பாற்றுவது நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 450 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com