டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

காலிபாட்டில் சேகரிக்க கூலியாக தினந்தோறும் ரூ.1,000 செலவாகிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
Published on

சென்னை,

காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கோரியும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். அது தொடர்பாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலி பாட்டில்களை சேகரிக்க தனி முகமை மூலம் செயல்படுத்த வேண்டும். அதில், டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது. காலி பாட்டில் சேகரிப்பு பிரச்சினை மற்றும் செலவினங்களுக்கு நாள்தோறும் கமிஷன் செலவு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரை ஏற்படுகிறது. மேலும், கையுறை, சானிடைசர் செலவினங்கள் ஏற்படுகிறது. ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு கூலியாக நாள்தோறும் ரூ.1,000 செலவாகிறது. காலிபாட்டில் சேகரிக்க கூலியாக தினந்தோறும் ரூ.1,000 செலவாகிறது.

காலி பாட்டில்களை சேகரித்து வைத்திட அறை வாடகை மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செலவினங்களை தவிர்த்து பணியாளர்களுக்கு பல்வேறு சமூக பிரச்சினைகளும் நோய் தொற்றுகளும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. விற்பனை செய்வதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் காலி பாட்டில்களை வாங்கி வைக்க கூட இடம் இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய தீர்வுகளை எடுத்து டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாத்திடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com