‘காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மே 31-ந்தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ - ஐகோர்ட்டு

உத்தரவை அமல்படுத்தாவிட்டால் ஜூன் 1 முதல் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்க உத்தரவிடப்படும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
‘காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மே 31-ந்தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ - ஐகோர்ட்டு
Published on

சென்னை,

வனம், வன விலங்கு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. வழக்குகளை விசாரிக்கும்போது, ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தியுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் அமல்படுத்த அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''மதுபாட்டில்களுக்கு கியூ. ஆர். கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தை அமல்படுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும்'' அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் வழங்கியும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு கண்டிருக்கவேண்டும். தினமும் 2 கோடி மது பாட்டில்களில் விற்பனை ஆகிறது.

காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இறுதியாக மே 31-ந்தேதி வரை அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் அமல்படுத்த வில்லை என்றால், அதன்பின் ஜூன் 1-ந்தேதி முதல் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும்'' என்று எச்சரிக்கை செய்தனர். விசாரணையை ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com