

நெல்லை,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ராஜினாமா செய்து தவெக,வில் இணைந்தார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக, ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளராக, மாவட்ட செயலர் ராமசுப்பிரமணியன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும், 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' என அழைக்கப்படும் வெள்ளத்துரை நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வெள்ளைதுரை 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தற்போது, அதிமுகவில் வெள்ளத்துரை இணைந்துள்ளதால், அவருக்கு 'சீட்' வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நாம் தமிழர் கட்சி சார்பாக, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, வரும் 14-ம் தேதி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகிறார். இதனால் அந்த தொகுதியில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.