

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் விருமந்துறை அருகே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற அழகுராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை எடுக்கச் சென்றபோது அழகுராஜா தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
உதவி ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால், மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா உயிரிழந்தார்.
கடந்த 24ம் தேதி ரவுடி வெள்ளைக்காளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்துச் சென்றபோது வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அழகுராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றுவற்காக அழகுராஜாவை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை வனப்பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து கைதான அழகுராஜா போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் வெட்டுக் காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி அழகுராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.