பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் :அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பருவமழை முன்னேற்பாடு ஆலேசானை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் :அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசியதாவது:-

27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிகம் பாதிக்கக் கூடியதாக 6 இடங்களும், மிதமாக பாதிக்கக் கூடியதாக 2 இடங்களும், குறைவாக பாதிக்கக் கூடியதாக 19 இடங்கள் என்று மொத்தம் 27 இடங்கள் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் முன்னேற்பாடு பணிகளாக நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மணல் மூட்டைகளை இருப்பு வைத்தல், தடுப்பு கட்டைகள் ஏற்படுத்துதல் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினருடன் தன்னார்வலர் குழுவினரை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பொதுப்பணித்துறையினர் அனைத்து ஏரி, குளம் ஆகியவற்றில் உள்ள ஆகாய தாமரை கொடிகளை அகற்றி, நீரின் அளவை கண்காணிக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிப்புகள் நேர்ந்தால், மக்களை மீட்க தேவையான போக்குவரத்து வசதியையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று ஜெனரேட்டர், பொக்லைன் மற்றும் மரம் அறுக்கும் எந்திரம், பவர் பம்புகள், அவசர கால மினவிளக்குகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலை துறையினர் சிறுபாலங்கள், சாலைகளில் ஏதேனும் உடைப்புகள் நேர்ந்தால் அதை உடனுக்குடன் சரி செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நிவாரண முகாம்கள்

மேலும், மழை வெள்ள காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் இதர இடர்பாடுகளை மேற்கொள்ள கால்நடை மருத்துவக்குழுக்களும், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிடவும், மின்விபத்துகள் ஏற்படாதவாறு காத்திட மின்சாரத்துறை அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் ஏற்படுத்திடவும், மழை வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு போதுமான நிவாரண முகாம்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பொதுமக்கைள நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்திட மருத்துவக்குழுக்கள் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்திட வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை

மேலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுபாட்டு அறை தொடங்கி 24 மணி நேர சுழற்சி பணிக்கு அலுவலர்களை நியமனம் செய்திட வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மீட்பு பணிகளை மற்றும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக பேரிடர் மேலாண்மை துறை கட்டுபாட்டு அறை எண் 04151-228801 மற்றும் 1077 என்ற எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பவித்ரா, கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து துறை உயர் அதிகாரிகள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com