தொடர் விடுமுறை நிறைவு: பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தென் மாவட்டங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தொடர் விடுமுறை நிறைவு: பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
Published on: 

சென்னை,

காலாண்டு தேர்வு விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்ததையொட்டி, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கும் சென்றிருந்தனர். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள், மதுரை, நெல்லை, திருச்சி, பெங்களுரூ, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு விடுமுறைக்காக சென்றனர்.

அதேபோல் காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறையும் விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று (திங்கட்கிழமை) வழக்கம் போல், பள்ளிகள் திறக்கின்றன. இதனால், தங்களின் இருப்பிடங்களுக்கு செல்வதற்கு நேற்று காலை முதலே மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். குழந்தைகளை அழைத்து கொண்டும், கைகளில் பெரிய பெரிய பைகளுடன், பஸ் நிலையங்களிலும், ரெயில்நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரெயில் நிலையம்

சொந்த ஊர் செல்வதற்காக, மதுரை ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அவர்கள் சென்னை, பெங்களூர், கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர். ஏராளமானவர்கள் மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று அதிக அளவில் படை எடுத்து வந்தனர்.

அவர்கள், மதுரையில் இருந்து சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணித்தனர். முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆர்வத்தில், தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு ரெயிலிலும் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறியதை காணமுடிந்தது.

பஸ்களில் கூட்டம்

ரெயில் நிலையம் மட்டுமின்றி பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதாவது மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பஸ்நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும், நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் வழக்கத்தை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. இதில் பயணிகள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பயணித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com