பாஜகவுடன் கூட்டணி பேச்சா? எடப்பாடி பழனிசாமி பதில்

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026-ம் ஆண்டு தேர்தல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி பேச்சா? எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

சேலம்,

சேலம் ஆத்தூரில் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வேல் வழங்கினர். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

அதிமுகவை பலர் முடிக்க பார்த்தார்கள். முடக்க பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை. அதிமுகவில் இருக்கும் அனைவருமே தலைவர்கள்தான். அதிமுக உங்கள் சொத்து. அதிமுக வலுப்பெற்று இருக்கிறது. திமுக தேய்கிறது.

அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும். தமிழ்நாட்டு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை அதிமுகதான் போராடிப் பெற்றுத் தந்தது. ரூ.1,500 தருகிறோம் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தோம். ஆனால், யாரோ சிலர் சொன்னார்கள் என்பதற்காக திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள்.

சுதந்திரம் கிடைத்து பல ஆண்டு ஆனாலும், மன்னராட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என நினைக்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தலைவாசல் கால்நடை பூங்காவை திறக்க மனமில்லை. உதயநிதி, இன்பநிதி என எல்லாருக்கும் நிதி என பெயர். நிதிதான் முக்கியம் அவர்களுக்கு. 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். எம்.ஜி.ஆர்., அம்மா இருக்கும் போது கட்சி வளர எப்படி துணை நின்றீர்களோ, அதேபோல எப்போதும் துணை நிற்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சேலத்துக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது கொடுத்தது என்பது எல்லாருக்கும் தெரியும். திமுகவினர் பேசுவது, அழகாக இருக்கும், வார்த்தை ஜாலத்தில் வல்லவர்கள். செயலில் பூஜ்ஜியம்.

திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக இருக்கிறது. ஒரே எதிரி திமுகதான், மற்ற கட்சிகள் இல்லை.அதிமுகவின் நிலைபாடு நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். யார், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் 6 மாதத்தில் தெரியும், அதை மறைக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி பேச்சா என்ற கேள்விக்கு 6 மாதம் கழித்து வந்து கேளுங்கள் என அவர் பதில் அளித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com