

தங்கம் திருட்டு
சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டது. அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
திருடுபோன தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர், கள்ளச்சாவி மூலம் திற க்கப்பட்டதா அல்லது லாக்கர் உடைக்கப்பட்டதா என்பது பற்றி தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அது பற்றிய முடிவை தடய அறிவியல் துறை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை.
சி.பி.சி.ஐ.டி. போலீசார், சி.பி.ஐ. முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டர், மற்றும் ஓய்வுபெற்ற கூடுதல் சூப்பிரண்டு ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
இதற்கிடையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கையில் எடுத்துள்ளனர். தங்கம் திருடுபோன நிறுவனத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள்.
நேற்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. ஆனால் அது தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.