இளம்பெண்ணை தினமும் பைக் டாக்ஸியில் அழைத்து சென்ற என்ஜினீயர்; அடங்காத ஆசையால் பாய்ந்த வழக்கு

தினமும் இளம்பெண்ணை தேனாம்பேட்டை அழைத்துச் சென்று, அதற்கான பணத்தை சதீஷ்குமார் பெற்று வந்துள்ளார்.
சென்னை,
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் புரசைவாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்வதற்காக பைக் டாக்ஸியை பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் பைக் டாக்ஸியை புக்கிங் செய்தபோது சதீஷ்குமார் என்ற இளைஞர் பைக் டாக்ஸி டிரைவராக வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போடியநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவில் என்ஜினீயரான சதீஷ்குமார், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பொருளாதார தேவைகளுக்காக பைக் டாக்ஸி ஓட்டி வருவதாக இளம்பெண்ணிடம் கூறிய சதீஷ்குமார், தினந்தோறும் அந்த பெண்ணை தேனாம்பேட்டைக்கு அழைத்து சென்று விடுவதாகவும், அதற்கான பணத்தை கொடுத்து விடுமாறும் கூறியிருக்கிறார். இதன்படி கடந்த 20 நாட்களாக அந்த பெண்ணை சதீஷ்குமார் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று அண்ணா மேம்பாலம் அருகே சென்றபோது பைக்கில் உட்கார்ந்து வந்த இளம்பெண்ணுக்கு சதீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






