பொறியியல் மாணவர் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ந் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. என்ஜினீயரிங் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கல் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரேண்டம் எண்ணை www.tneaonline.org இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே மாதியாக கட்ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.

மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26-ந் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com