என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மச்சாவு; மாமல்லபுரம் அருகே அழுகிய நிலையில் உடல் மீட்பு

மாமல்லபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் அங்குள்ள காட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மச்சாவு; மாமல்லபுரம் அருகே அழுகிய நிலையில் உடல் மீட்பு
Published on

என்ஜினீயரிங் மாணவர்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் நாகரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்டுமாலியாத்ரி. இவரது மகன் கண்டுநவீன் (வயது 21). இவர் அங்குள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தனது பெற்றோரிடம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனத்தெரிகிறது. இந்த நிலையில் அவரது பெற்றோர் தனது மகன் கண்டுநவீன் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

அழுகிய நிலையில் உடல்

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள மணமை காட்டுப்பகுதியில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த சிலர் விறகு எடுக்கச்சென்றனர். அப்போது ஒரு புதர் பகுதியில் துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது.

இதுபற்றி அவர்கள் உடனடியாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீசார் கண்டுநவீனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

இதற்கிடையே, பவானி அம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு கண்டுநவீன் மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதிக்கு வந்த காரணம் என்ன? கடந்த ஏப்ரல் 14-ந்தேதி பவானி அம்மன் கோவிலுக்கு செல்வதாகக்கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த கண்டு நவீன் இந்த இடைப்பட்ட நாட்களில் எங்கு தங்கி இருந்தார்? அவருடன் சக மாணவர்கள் யாராவது உடன் வந்தார்களா? என கல்லூரி மாணவரின் மர்ம மரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com