என்ஜினீயரிங், மருத்துவ கல்வியில் நுழைவுத்தேர்வு மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

தரமான மாணவர்கள் சேருவதற்கு என்ஜினீயரிங், மருத்துவ கல்வியில் நுழைவுத்தேர்வு முறைதான் சரியான வழி மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்.
என்ஜினீயரிங், மருத்துவ கல்வியில் நுழைவுத்தேர்வு மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்
Published on

சென்னை,

என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற தொழில்முறை கல்வியில் தரமான மாணவர்கள் சேர வேண்டுமென்றால், நுழைவுத்தேர்வு முறைதான் சரியான வழி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான இ.பாலகுருசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

விரும்பும் மாணவர்களுக்கு சமமான, அதேசமயம் எளிதாக கிடைக்கும் விதத்தில் உயர்கல்வியை விரிவுபடுத்துவது எவ்வளவு அவசியமோ அதைப்போல் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் தரமான உயர்கல்வியை வழங்குவதும் அவசியமாகும். உயர்கல்வியை விரிவுபடுத்தும் முயற்சிகள் எந்தவகையிலும் தரத்தைப் பாதிக்கக்கூடாது. என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற தொழில்முறை கல்வியில் தரமான மாணவர்கள் சேரவேண்டுமானால், நுழைவுத்தேர்வு முறைதான் ஒரே சரியான வழியாகும்.

குறிப்பிட்ட படிப்பில் சேருவதற்கு மாணவருக்கு போதிய அறிவும், புத்திசாலித்தனமும் இருக்கின்றனவா என்று மதிப்பிடுவதும், குறிப்பிட்ட படிப்பில் வெற்றிபெறுவதற்கான திறமை உள்ளதா என்று கண்டறிவதும் நுழைவுத்தேர்வு முறையின் இரு முக்கிய இலக்குகள் ஆகும். உலகம் முழுவதும் எல்லா உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கையில் நுழைவுத்தேர்வு முறை ஓர் அங்கமாக உள்ளது. இது என்ஜினீயரிங் உள்பட தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கு மிகவும் முக்கியமானது. மேலும், எல்லோருக்கும் பொதுவான தரத்தை நிர்ணயிக்க நுழைவுத்தேர்வு முறை உதவும்.

தமிழகத்தில் தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முறை 1984-85-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 20 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2006-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து நுழைவுத்தேர்வுக்கு தயாராக இயலாது என்பதும், நுழைவுத்தேர்வு சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது என்பதும் காரணங்களாக கூறப்பட்டன. இது முற்றிலும் சரியானது அல்ல.

பொது நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்ததற்கு பிறகு, போதிய திறனில்லாத மாணவர்கள் சேருவதால், என்ஜினீயரிங் கல்வியின் தரம், தேர்ச்சிவிகிதம் ஆகியவை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகின்றன.

பொது நுழைவுத்தேர்வு முறையை நீக்கியதால் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு எந்த வகையிலும் களையப்படவில்லை. மாறாக, வசதியான, நகர்ப்புற மாணவர்கள் தொடர்ந்து தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்து, அதிக அளவில் தொழில்முறை கல்வியில் சேருகிறார்கள் என்பதுதான் உண்மை.

பள்ளிக்கல்வி முறையை மறுசீரமைத்தல், தேர்வு முறையை சீராக்குதல், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவையே தற்போது வேகமாக தரம் குறைந்துவரும் என்ஜினீயரிங் கல்விமுறையை மீட்டெடுப்பதற்கும், எதிர்காலத்தில் லட்சக்கணக்கான என்ஜினீயர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் சரியான வழிகள் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com