

சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி கடந்த 24-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வு மூலம் 6 ஆயிரத்து 442 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுவிட்டன.
இதன் தொடர்ச்சியாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெற இருக்கும் இந்த கலந்தாய்வில், தரவரிசை பட்டியலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை உள்ள மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை இவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
அதன்பிறகு 14 ஆயிரத்து 789 முதல் 45 ஆயிரத்து 227 வரை தரவரிசையில் உள்ளவர்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு வருகிற 1-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 3-ம் சுற்று கலந்தாய்வு 5-ந்தேதியும், 4-ம் சுற்று கலந்தாய்வு 9-ந்தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி வரை நடக்கிறது.
இதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கும் நேற்று கலந்தாய்வு தொடங்கி உள்ள நிலையில், வருகிற 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கலந்தாய்வில் மாணவர்கள் முதலில் முன்பணம் கட்டுவதற்கும், அதன்பின்னர் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டு, அதையடுத்து தற்காலிக ஒதுக்கீடும், அதில் விருப்ப கல்லூரியை உறுதி செய்யும் மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படுகிறது.