ஆங்கில புத்தாண்டு: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Published on

சென்னை,

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச.30 மற்றும் 31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (டிச.30-ம் தேதி) 240 பேருந்துகளும், நாளை 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும் நாளையும் மொத்தம் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதவரத்திலிருந்து இன்றும், நாளையும் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப ஜன.3-ம் தேதி (சனிக்கிழமை) அன்று 525 பேருந்துகளும், ஜன.4-ம் தேதி 765 பேருந்துகளும் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை 11,502 பயணிகளும் புதன்கிழமை 8,380 பயணிகளும் வியாழன் அன்று 11,135 பயணிகளும் வெள்ளிக்கிழமை 7,501 பயணிகளும் சனிக்கிழமை 10,794 பயணிகளும் ஞாயிறு அன்று 19,216 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com