எண்ணூர் வாயு கசிவு விவகாரம் - தொழிற்சாலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எண்ணூர் வாயு கசிவு விவகாரம் - தொழிற்சாலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாயுக்கசிவு தொடர்பாக ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது. கசிவு ஏற்பட்ட இடத்தில் ஐ.ஐ.டி. மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வுக்குப் பிறகு கோரமண்டல் தொழிற்சாலை நுழைவு வாயிலில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ஐ.ஆர்.எஸ். (Indian Register of Shipping) அனுமதி பெறும் வரை தொழிற்சாலை இயங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாயுக்கசிவு ஏற்பட்ட இடத்தை சரிசெய்து தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com