எண்ணூர் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை: டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் - 8 கிராம மீனவர்கள் போராட்டம்

மீன்கள் இறந்து 25 நாட்கள் ஆகியும், இதுவரை அது தொடர்பான முழுமையான ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடவில்லை.
எண்ணூர் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை: டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் - 8 கிராம மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம்
Published on

சென்னை,

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடந்த மாதம் திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்த மீன்களின் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, எண்ணூர் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கடும் அச்சமடையும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் திடீர் முற்றுகை

மீன்கள் இறந்து 25 நாட்கள் ஆகியும், இதுவரை அது தொடர்பான முழுமையான ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடவில்லை. இதை கண்டித்தும், மீன்கள் இறப்புக்கான ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும், ஆலை கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்த பின்னரே ஆற்றில் விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

8 மீனவ கிராம மீனவர்கள்

இன்று காலை நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக் குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு வந்து, எண்ணூர் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை இயக்குனர் ஜான் பெக்கர், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com