

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நந்தினி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், மணக்காடு புதூர் கவுண்டன் பாளையத்தில் உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்த கோவிலின் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்யும் கபிலன் என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் நந்தினியின் தாய்க்கு தெரியவந்தபோது, கபிலனுடன் பேசுவதை நிறுத்திவிடுமாறு கூறி கண்டித்துள்ளார். இதனால் நந்தினி கபிலனுடனான பழக்கத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது தோழியுடன் வீடு திரும்பி கொண்டிருந்த நந்தினியை கபிலன் வழிமறித்துள்ளார்.
‘ஏன் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டாய்?’ என்று கூறி வாக்குவாதம் செய்த அவர், நந்தினியை தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் தோழி, உடனடியாக நந்தினியின் வீட்டிற்கு ஓடிச் சென்று நந்தினியின் தாயை அழைத்து வந்திருக்கிறார். அதற்குள் நந்தினியை கீழே தள்ளிவிட்ட கபிலன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் பின் கழுத்தில் சரமாறியாக குத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த நந்தினியின் தாய் மற்றும் தோழி ஓடி வந்தபோது, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு கபிலன் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சேலம் பெத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கபிலனை கைது செய்தனர். தன்னிடம் பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம் ஏற்பட்டு நந்தினியை கத்தியால் குத்தியதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நந்தினி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.