

மதுரை,
பேச மறுத்த கள்ளக்காதலி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
மதுரை புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தா (வயது 33). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள்.
சாந்தா வேலை பார்த்த கடையில் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் வேலை பார்த்துள்ளார். இதன் காரணமாக அவரது வீட்டுக்கு சாந்தா சென்று வந்தார். அப்போது பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25), சாந்தாவிடம் நெருங்கி பழகி உள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதை அறிந்த செல்வகுமார், மனைவியை கண்டித்தார். அதன் காரணமாக சரவணபிரபுவுடன் பேசுவதை சாந்தா தவிர்த்துள்ளார். ஆனால் அவர் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் அவசர வேலை காரணமாக கடைக்கு சென்று விட்டார். சாந்தா தனது குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சரவணபிரபு மது போதையில் திடீரென்று சாந்தா வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் தன்னுடன் பேசாமல் இருப்பது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனால் ஆத்திரம் அடைந்த சரவணபிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தாவின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
கழுத்தில் ரத்தம் வழிந்தநிலையில் சத்தம் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவந்து சாந்தா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் இந்த சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, சாந்தா உயிருக்கு போராடியதை கண்டனர்.
உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பிச்சென்ற சரவணபிரபுவை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனால் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.