

சென்னை,
கோடை கால வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் பேன், ஏசி இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அடிக்கடி மின்வெட்டு தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.
இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தங்களுடைய அதிருப்தியை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையை மட்டுமன்றி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இந்த மின்தடைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இந்த விவகாரம் முன்னாள் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வீடியோ வெளியிட்டு அரசுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அதில்,
சென்னையில் அடிக்கடி மின்தடை என செய்திகள் வருகின்றன; மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை, கடன் சுமை என பேசி வருகிறார் அமைச்சர் இதே ஊழியர், நிதிப் பற்றாக்குறையுடன்தான் தடையில்லாமல் மின்சாரம் தந்தோம்; தனியார்வசம் மின்வாரியத்தை வழங்கும் மத்திய அரசின் குரலில் பேசுகிறதா தவெக? மக்கள் உங்களிடம் பவரை தந்துள்ளனர். பவர் கட் இருக்கக் கூடாது என்பதைத்தான் மக்கள் கேட்கின்றனர். அதற்கு என்ன வழி என்பதை பார்த்தாலே போதும் என்றார்.