மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை அள்ளிய மக்கள்

மீன்பிடி திருவிழாவில், கண்மாயில் இறங்கி போட்டி போட்டு கிராம மக்கள் மீன்களை அள்ளினர்.
மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை அள்ளிய மக்கள்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய வழக்கப்படி கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டது. அதன்பிறகு கண்மாய் கரையில் கூடியிருந்தவர்கள், கண்மாய் தண்ணீரில் இறங்கி மீன்களை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பிடிக்க தொடங்கினர். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை அள்ளினர்.

நாட்டு வகை மீன்கள்

கூடைகள், வலைகள், கச்சா ஆகியவைகளை பயன்படுத்தி கெழுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். மீன்கள் சரிவர கிடைக்காதவர்களுக்கு, அதிக மீன்கள் பிடித்த பொதுமக்கள் தங்களிடம் இருந்த மீன்களை கொடுத்து உதவினர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கூறும் போது, கண்மாயில் பிடித்த மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என காலம் காலமாக நம்பி வருகிறோம். ஆதலால் மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை வீட்டுக்கு சென்று சமைத்து சாப்பிடுவோம் என்றார்.

இதனால் சருகுவலையபட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு சமையல் நேற்று கமகமத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com