தார் தொழிற்சாலையால் கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்பு

மேல்மலையனூர் அருகே தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்
தார் தொழிற்சாலையால் கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்பு
Published on

விழுப்புரம்

கலெக்டர் அலுவலத்தில் மனு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி, சங்கிலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மேல்மலையனூர் அருகே சங்கிலிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் தார் கலவை தயாரிக்க சிறிய எந்திரங்கள் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அந்த எந்திரங்களை கொண்டு ஆண்டுக்கு அதிகபட்சம் 10 நாட்கள் மட்டும் தார் கொதிக்க வைத்து அதில் ஜல்லி கலந்து கொண்டு செல்லப்பட்டது. இதனால் கரும்புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதனை அப்போது நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

உரிமத்தை ரத்து செய்யவேண்டும்

இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பெரிய எந்திரங்கள் நிறுவப்பட்டு தார் கொதிக்க வைக்கப்பட்டதால் மீண்டும் கரும்புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலருக்கு புகார் மனு அனுப்பியதன்பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அந்த தொழிற்சாலையை ஆய்வு செய்தபோது அது உரிய அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டது. அப்போது தொழிற்சாலை தொடர்ந்து இயங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை இயங்க எந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்தும், அதற்கு அனுமதி வழங்கிய அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com