

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மருத்துவ உபகரணங்களை வழங்கினார். மேலும் மாணவர் மன்றத்தினை திறந்து வைத்தும், மருத்துவக்கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்கிட விருட்சம் என்ற அமைப்பினையும் தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ராஜேஸ்குமார் எம்.பி. மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.41 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பீட்டில் பயிற்சி மருத்துவ உபகரணங்களை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி உள்ளார். அது மட்டுமல்லாது புற்றுநோய் சிகிச்சைக்காகவும், கொரோனா கால சிகிச்சைக்காகவும் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார். தற்போது தொடங்கப்பட்டுள்ள விருட்சம் எனும் அமைப்பிற்கு, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தனது ஒரு மாத ஊதியத்தினை நன்கொடையாக வழங்கி உள்ளார். அதேபோன்று நானும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரும் எங்களது ஒரு மாத ஊதியத்தினை இந்த அமைப்பிற்கு நன்கொடையாக வழங்க உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை முதல்வர் வெங்கடசுப்பிரமணியன், அரசு வக்கீல் செல்வம் மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.